உ.பி. தீ விபத்து துயரம் முதல் நடிகை கஸ்தூரி கைது வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

உ.பி மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி: உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளது. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் 16 பேர் காயமடைந்தனர். அந்தக் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சையை மாநில அரசு அளித்து வருகிறது.

இந்த அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் கூறும்போது, “விபத்தைத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவின் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்துள்ளன" என்றார்.

தீ விபத்துக்கு காரணம் என்ன? - இந்தத் தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாகத இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், அதற்கான காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள் இரங்கல், நிவாரண நிதி அறிவிப்பு: இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரிவுபதி முர்மு, “இந்தக் கொடூரமான துயரத்தைத் தாங்கும் சக்தியை குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இறைவன் தருவானாக. காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.7 லட்சம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

‘அமரன்’ திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வந்த இந்து முன்னணியின் மாநிலத் துணைத் தலைவரை போலீஸார் கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

“பழிவாங்கும் முயற்சி” - தனுஷுக்கு நயன்தாரா பகிரங்க கடிதம் - நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்பட முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ்.

அதற்கு தனது தரப்பு பதிலை பகிரங்க கடிதம் மூலம் நடிகை நயன்தாரா கொடுத்துள்ளார். அதில், “நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கெனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்” என்று நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாராவின் இந்தப் பதிவுக்கு பதிவுக்கு, தனுஷ் உடன் நடித்த பல நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்த விவகாரத்தை முன்வைத்து இணையத்தில் தனுஷ் ஆதரவு, எதிர்ப்பு என நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் தடை: மறுஆய்வு மனு நிராகரிப்பு - வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து, கடந்த அக்டோபர் 22-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை 9 நாட்களில் ரூ.2,800 குறைவு: சென்னையில் சனிக்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,935-க்கும், ஒரு பவுன் ரூ.55,480-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமர் நவ.18-ல் நியமனம்: இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை அடுத்து, பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் பேசிய தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா, "புதிய அமைச்சரவையை நாங்கள் திங்கட்கிழமை நியமிக்கவுள்ளோம். இந்த அமைச்சரவை அதிகபட்சம் 25 பேரை மட்டுமே கொண்டதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

நடிகை கஸ்தூரி கைது: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை, சென்னை போலீசார் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்துள்ளனர். முன்னதாக, அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE