மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
தேர்தல் ஆணைய சோதனைகளில் எதிர்க்கட்சிகள் மட்டுமே குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் சோதனைக்குட்படுத்தப்பட்டது. தேர்தல் பேரணியில் உரையாற்றுவதற்காக ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதிக்கு வந்தபோது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தனது ஹெலிகாப்டரை சோதனையிடும் வீடியோவை எக்ஸ் தளத்தில் அமித்ஷா பகிர்ந்துள்ளார்.
அமித்ஷாவின் எக்ஸ் பதிவில், "இன்று, மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, எனது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல் முறையை பாஜக நம்புகிறது. பாஜக தேர்தல் ஆணையம் வகுத்த அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது.
நாம் அனைவரும் ஆரோக்கியமான தேர்தல் முறைக்கு பங்களிக்க வேண்டும். இந்தியாவை உலகின் வலிமையான ஜனநாயகமாக வைத்திருப்பதில் நமது கடமைகளைச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
» கப்பலில் கடத்தப்பட்ட 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - குஜராத் கடற்பகுதியில் 8 பேர் கைது
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியும் இங்கே போட்டியிடுகின்றன.