ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் சோனியாவின் கனவு பலிக்காது: அமித் ஷா கருத்து

By KU BUREAU

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 13-ம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்தது. 2-ம் கட்ட வாக்குப் பதிவு வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், அங்கு பாஜக கூட்டணி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கிரிதஹ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சோனியா காந்தி தன் மகன் ராகுலை ஜார்க்கண்டில் எப்படியாவது நிலைநிறுத்திவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

ராகுல் விமானம்: சோனியாவின் ‘ராகுல் விமானம்’ 20 முறை தரையிறங்கமுடியாமல் மோதிவிட்டது. இப்போது 21-வது முறையாக தியோகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மோத உள்ளது. ஒருபோதும் சோனியாவின் கனவு பலிக்காது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி, சட்டவிரோத குடியேறிகளை வாக்காளர்களாக மாற்றியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டவிரோத குடியேற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து நக்சல் இயக்கங்கள் அப்புறப்படுத்தப்படும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி வளம் உள்ளது. ஆனால், அம்மாநில மக்கள் வறுமையில் உள்ளனர். பாஜக இந்த நிலைமையை மாற்றி, அம்மாநிலத்தை செழிப்பானதாக மாற்றும். ஊழலில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைப்போம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியால் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE