நந்தூர்பார்: மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நந்தூர்பார் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பொதுக் கூட்டங்களில் சிவப்பு நிற அரசியல் சாசன புத்தகத்தை நான் காட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கிறது. நிறம் எவ்வாறாக இருந்தாலும், அரசியல்சாசனத்தை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அதற்காக உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். அரசியல் சாசன புத்தகத்தை வெற்றுப்புத்தகம் என பிரதமர் மோடி நினைக்கிறார். ஏனென்றால் அவர் அதை படித்ததில்லை.
முடிவெடுக்கும் விஷயங்களில் ஆதிவாசிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. நான் வைத்திருக்கும் சிவப்பு நிற புத்தகத்தை நகர்ப்புற நக்சல் கொள்கையுடன் தொடர்புபடுத்த பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர். ஆதிவாசிகளை வனவாசிகள் என குறிப்பிட்டு பழங்குடியினரை பாஜக-வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் புண்படுத்துகின்றன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை, இலவச பஸ் பயணம், ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. நாட்டில் சாதிரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போதுதான் ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை சரியாக அறிய முடியும். இவ்வாறு ராகுல் கூறினார்.