டெல்லியில் ‘கடும்’ காற்று மாசுபாடு: 300 விமானங்கள் தாமதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By KU BUREAU

புதுடெல்லி: காற்று மாசுபாடு காரணமாக அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்ததால், டெல்லி விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

கடுமையான புகைமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணி முதல் டெல்லிக்கு வரும் மொத்தம் 115 விமானங்களும், டெல்லியில் இருந்து புறப்படும் 226 விமானங்களும் தாமதமாகியுள்ளதாக விமான கண்காணிப்பு இணையதளம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லி விமான நிலைய வருகையில் சராசரியாக 17 நிமிட தாமதமும், புறப்படுவதில் சராசரியாக 54 நிமிட தாமதமும் உள்ளது.

முன்னதாக, டெல்லி விமான நிலையம் இன்று பயணிகளுக்கு ஒரு அறிவுரையை வழங்கியது. அதில், ‘டெல்லி விமான நிலையத்தில் குறைந்த பார்வைநிலை நடைமுறைகள் நடந்து வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவலுக்கு பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று அது தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘இன்று காலை, புகைமூட்டம் காரணமாக அமிர்தசரஸ், வாரணாசி மற்றும் டெல்லிக்கு செல்லும் விமானங்கள் பாதிக்கலாம். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் உங்கள் விமான நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டது.

டெல்லியின் காற்றின் தரம் இன்று ‘கடுமையான’ பிரிவில் பதிவாகியுள்ளது. டெல்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு 418ல் இருந்து 452 ஆக உள்ளது. செவ்வாயன்று, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 334 ஆக இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தகவல்களின்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) மதியம் 12 மணியளவில் 459 ஆக அளவிடப்பட்டது, இது 'கடுமையான' பிரிவின் கீழ் வருகிறது. டெல்லியின் 39 கண்காணிப்பு நிலையங்களில், ஆனந்த் விஹார், விமான நிலையம் மற்றும் பட்பர்கஞ்ச் உட்பட 32 நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கு மேல் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE