திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பினராயி விஜயன் அரசு, ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரை ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்துள்ளது.
தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன், அரசு அதிகாரிகளுக்கு மதம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவை தொடங்கியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேளாண் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலர் என்.பிரசாந்த், மூத்த அதிகாரி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் அறிக்கையை அடுத்து, அதிகாரிகள் மீது முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2013-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், கடந்த மாதம் "மல்லு இந்து அதிகாரிகள்" என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சலசலப்பைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகக் கூறினார். விசாரணையில், தொலைபேசியின் தடயவியல் பரிசோதனையில் அது ஹேக் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், தொலைபேசி ரீசெட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
2007-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என் பிரசாந்த், கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக் மீது முகநூல் பதிவில் கடும் விமர்சனத்தை வைத்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூத்த அதிகாரி தனக்கு எதிராக ஆதாரமற்ற செய்திகளை திட்டமிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதன் மூலம் ஜெயதிலக் தன்னைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக பிரசாந்த் குற்றம் சாட்டினார். மூத்த அதிகாரியை ஒரு மனநோயாளி என அவர் விமர்சித்தார்.
» தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
பிரசாந்த் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் நலனை இலக்காகக் கொண்ட முயற்சியான 'உன்னதி'யின் பல கோப்புகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஊடக அறிக்கையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஏற்பட்டது. பிரசாந்த் இதற்கு முன்பு கோழிக்கோடு மாவட்ட கலெக்டராகப் பணியாற்றியவர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், 'கலெக்டர் ப்ரோ' என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
சஸ்பெண்ட் நடவடிக்கை தொடர்பாக பேசிய பிரசாந்த், "இது எனக்கு ஒரு புதிய அனுபவம். அரசாங்கத்தை அல்லது அதன் கொள்கைகளை விமர்சிப்பது தவறு, அதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். நான் அப்படி எதுவும் செய்தேன் என்று யாரும் கருத மாட்டார்கள். எனது விமர்சனம் சில நபர்களை குறிவைத்து இருந்தது. பொருத்தமற்ற போக்குகள், குறிப்பாக இட்டுக்கட்டப்பட்ட அறிக்கைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. போலி அறிக்கைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்று நான் நம்புகிறேன்.
அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இந்த உரிமைக்குள் நான் எந்த எல்லையைத் தாண்டியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. உத்தரவின் முழு விவரத்தை பார்ப்போம், பின்னர் எனது அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பேன். நான் ஐஏஎஸ் அதிகாரி என்ற ஒரே லட்சியத்துடன் பிறக்கவில்லை. எனக்கு வேறு ஆர்வங்களும் நாட்டங்களும் உள்ளன. "என்று அவர் கூறினார்.