எந்த மதமும் காற்று மாசுபாட்டை ஊக்குவிக்காது - பட்டாசு தடைக்கான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

புதுடெல்லி: நகரில் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து டெல்லி அரசு நவம்பர் 25 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் பட்டாசு தடை குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, நகரில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை வேண்டும் எனக் கோரியது.

அவர்கள் அளித்த உத்தரவில், "எந்த மதமும் மாசுபாட்டை உருவாக்கும் எந்தச் செயலையும் ஊக்குவிப்பதில்லை. இதுபோல தொடர்ந்து பட்டாசு வெடித்தால், டெல்லியில் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை உரிமையும் பாதிக்கப்படும். எனவே நவம்பர் 25-ம் தேதிக்குள் நகரத்தில் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை எடுக்க வேண்டும். பட்டாசுகளின் இரசாயன எச்சம் நச்சுப் புகையால் நகரத்தை மூடி, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தது.

கடந்த வாரம் டெல்லி அரசு மற்றும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்த தவறியதற்கு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இன்று டெல்லி காவல்துறைத் தலைவர், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார், ஆனால் நீதிமன்றம், "இது எல்லாம் கண்துடைப்பு" என்று கூறியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE