அகோலா: காங்கிரஸ் எந்த மாநிலத்தில் ஆட்சிஅமைத்தாலும், அந்த மாநிலம் ராயல் குடும்பத்தின் ஏடிஎம் இயந்திரமாக மாறி விடுகிறது என்று மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஆளும் சிவசேனா (ஏக்நாத் அணி), பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) ஆகியவை ‘மகாயுதி’ கூட்டணியாகவும் சிவசேனா (உத்தவ் அணி), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட் டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார்.
» விரைவு விசாவை நிறுத்தியது கனடா அரசு: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
» மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களில் உதவி மையம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
அப்போது அவர் பேசியதாவது: எந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறதோ, அந்த மாநிலம் ராயல் குடும்பத்துக்கு (சோனியா) பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரங்களாக மாறிவிடுகின்றன. அதுபோல் மகாராஷ்டிர மாநிலத்தை ஏடிஎம் இயந்திரமாக காங்கிரஸ் மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி பேசி வருகிறது. நான் சவால் விடுகிறேன். அம்பேத்கரின் பங்களிப்புக்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை நிரூபிக்க முடியுமா? அம்பேத்கர் பிறந்த இடம், லண்டனில் அவர் தங்கிய இடம், புத்த மதத்தை தழுவிய இடம் என முக்கியமான 5 இடங்களுக்கு காங்கிரஸ் ராயல் குடும்பத்தினர் சென்றிருக்கிறார்களா?
காங்கிரஸின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஹரியானா மக்கள் புரிந்து கொண்டார்கள். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சதியை அந்த மாநில மக்கள் முறியடித்தனர். ‘‘நாம் ஒற்றுமையாக இருந்தால், பாதுகாப்பாக இருப்போம்’’ என்றஸ்லோகத்தை அவர்கள் பின்பற்றினார்கள்.
இந்த நாடு வலுவிழந்தால்தான், கட்சி பலமடையும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதனால்தான் ஜாதி பிரச்சினையை தூண்டி விடுகிறது. எனவே, மகாராஷ்டிர மக்கள் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸ் போன்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் ஊழல்தலைவிரித்தாடியது. நான் பிரதமராக பதவியேற்ற பிறகு 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 4 கோடிதரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. எனவே, மகாராஷ்டிரமக்களின் ஆசிர்வாதம் கேட்டுவந்திருக்கிறேன். பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
வக்பு வாரியத்துக்கு மாறும்: சதாரா மாவட்டம் கராத் பகுதியில் பாஜக வேட்பாளர் அதுல் போஸ்லே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில், அதுல் போஸ்லேவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது:
வக்பு சட்டத்தை காங்கிரஸ் கட்சிதான் மாற்றியது. அதன்படி யார் நிலத்தையும் வக்பு வாரியம் அபகரிக்க முடியும். காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமத்தையே வக்பு வாரியத்துக்கு மாற்றி அளித்துள்ளனர்.
எனவே, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி (எம்விஏ) ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நிலத்தை வக்பு வாரியத்துக்கு மாற்றி விடுவார்கள். யார் நிலமும் பறிபோகாமல் இருப்பதற்காக வக்பு சட்டத்தை மாற்ற சரத் பவாரும் ராகுல் காந்தியும் எதிர்க்கின்றனர். எதிர்க்கட்சிகள் எந்த முயற்சி செய்தாலும், இந்த சட்டத் திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.