பழங்குடியின மக்களிடமிருந்து நீர், நிலம் மற்றும் காட்டை பாஜக பறிக்க விரும்புகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மொத்தம் 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா நகரில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:
பழங்குயினர் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. பழங்குடியின மக்களிமிருந்து நீர், நிலம், மற்றும் காட்டை பாஜக பறிக்க விரும்புகிறது. வளர்ச்சி என்ற வார்த்தையின் பெயரில் பழங்குடியினர் நிலத்தை பாஜக அபகரிக்க விரும்புகிறது.
நாட்டை நடத்திச் செல்வதில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பங்கேற்பு இல்லை. நாட்டின் தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் திறமைசாலிகள். அவர்களிடம் குறை ஏதுமில்லை. அவர்கள் எந்த வேலையையும் செய்யலாம், ஆனால் அவர்களின் பாதை தடுக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகி விட்டார். நாட்டை நடத்திச் செல்வதில் 90 சதவீத மக்களின் பங்கேற்பு வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் அம்பானி-அதானி போன்ற ஒரு சிலரால் நாட்டை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
» அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் முடக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: இபிஎஸ்
இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் இண்டியா கூட்டணி, மறுபுறம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அரசியலமைப்பை இண்டியா கூட்டணிக் கட்சிகள் பாதுகாத்து வரும் வேளையில், அதனை பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அழிக்க நினைக்கின்றன. அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல. இதில் பிர்சா முண்டா, அம்பேத்கர், ஜோதிபா புலே, மகாத்மா காந்தி ஆகியோரின் சிந்தனைகள் உள்ளன. இந்த அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களை பாதுகாக்கிறது. எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாடு இயங்க வேண்டும் என்று இண்டியா கூட்டணி விரும்புகிறது.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது முதல் உள்ளூர் அடையாளத்தை வளர்ப்பது மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வது வரை 7 உத்தரவாதங்களை இண்டியா கூட்டணி அளிக்கிறது. இவை மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் சம வாய்ப்புகளுடனும் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்க இண்டியா கூட்டணி பாடுபடும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.