புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பொதுமக்கள், நிறுவனங்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி அதற்கு நிகராக ரூ.500 நோட்டுகளாக பெற்றுக் கொண்டனர். இதுபோல் திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது புள்ளிவிவரம் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் வெளியிட்டது.
அதில், கடந்த ஆண்டு ரூ.2,000நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 98.04 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டன. ஆனால், இன்னும் 1.96 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வரவில்லை. அதன் மதிப்பு ரூ.7,117 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஒரு மாதத்தில் கூடுதலாக ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. தற்போது ரூ.6,977.6 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு திரும்ப பெற்றது. அவற்றுக்கு பதில் புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தியது. அத்துடன் ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது. அதன்பின்னர் ரூபாய் நோட்டுகள் தாராளமாக கிடைக்க தொடங்கிய பிறகு, 2018 -19-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை கொடுத்து அதற்கு நிகரான பணத்தை இன்னமும் பெற்றுக் கொள்ள முடியும். டெல்லியில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் ஆதார் மற்றும் புகைப்படத்தை கொடுத்து ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரூ.2,000 நோட்டுகள் இருந்தால் பான் எண் கூடுதலாக கொடுத்து பணத்தை பெறலாம்.
» எந்தவிதமான பிணையம், உத்தரவாதமும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கல்வி கடன்
» வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு