‘‘தீவிரவாதத்தை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது’’ டெல்லியில் நடைபெறும் தீவிரவாத ஒழிப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தீவிரவாத ஒழிப்பு குறித்த 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து டிஜிபி அந்தஸ்திலான அதிகாரிகள், தீவிரவாத ஒழிப்பில் தொடர்புடைய சட்டம், தடயவியல், தொழில்நுட்பம் நிபுணர்கள் பங்கேற்றனர். இதில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் உள்ள சவால்கள், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, சர்வதேச ஒத்துழைப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. இந்த மாநாட்டில் நேற்று பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
சட்டம், ஒழுங்கு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் தீவிரவாதத்துக்கு எல்லைகள் இல்லை. அதனால் தீவிரவாதத்தை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உளவுத் தகவல்களை பகிர்ந்து கொண்டு கூட்டு யுக்திகளை வகுக்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இளம் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு படையினர் பயிற்சி அளித்து, தொழில்நுட்பங்களை பயன்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்குப்பின், தீவிரவாதத்தை ஒழிப்பதில் திடமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்வதில்லை என்ற பிரதமர் மோடியின் கொள்கையை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளால், நாட்டில் தீவிரவாதம் 70 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது தீவிரவாதிகளின் ஆயுள் சில நாட்கள்தான்.
» கோடநாடு விவகாரத்தில் அவதூறு; பழனிசாமிக்கு மான நஷ்டஈடாக தனபால் ரூ.1.10 கோடி வழங்க உத்தரவு
மத்திய, மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர், நக்சல் பாதிப்பு மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், தீவிரவாத தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். இந்த சட்டத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பயன்படுத்தி இதுவரை 632 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவற்றில் 498 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 95 சதவீத வழக்குகளில் தண்டனைகள் கிடைத்துள்ளன.
தீவிரவாதத்துக்கு எதிராக மாநிலங்களில் உள்ள காவல்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாத வழக்குகளை வெளிநாடுகளிலும் விசாரிக்கும் அளவு என்ஐஏ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் மூலம், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்களை காவல் அதிகாரிகள் முடக்க முடியும். மாவோயிஸ்ட் வன்முறை, ஜிகாதி தீவிரவாதம் ஆகியவை உட்பட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க 25 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உளவுத் தகவல்களை சேகரிக்கும் மல்டி ஏஜன்சி மையத்தின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சைபர் பாதுகாப்பு, தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். இந்தமுறை குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதில் வெற்றியடைந்துள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சிறந்த பங்களிப்பை அளித்த 11 என்ஐஏ அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமித் ஷா பேசினார்