வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு ரூ.30,000 அபராதம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வயல்களில் விவசாயக்கழிவுகள் அல்லது வைக்கோல்களை எரிக்கும் விவசாயிகளுக்கான அபராதம் இப்போது ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை உள்ளவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

2021 ஆம் ஆண்டின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) சட்டத்தின் கீழ், காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இந்தத் திருத்தம் வந்துள்ளது. புதிய திருத்தத்தின் ஒரு பகுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் மூலம் மாசு தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கும், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் கையாளப்படும்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பட்டாசுக்கு தடை விதித்துள்ள டெல்லி அரசை விமர்சித்தது. இந்த தடை "முழுமையாக செயல்படுத்தப்படவில்லை" என்று கூறிய நீதிமன்றம், டெல்லியில் தடையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் பதிவு செய்யப்பட்டது. ஆனந்த் விஹார், பவானா, முண்ட்கா மற்றும் வஜிர்பூர் ஆகியவை 'கடுமையான' பிரிவில் காற்றின் தரத்தை பதிவு செய்தன. மற்ற பகுதிகள் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE