புதுடெல்லி: பொதுநலன் என்ற பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொது நலனுக்கு தேவைப்பட்டால் தனியாருக்கு சொந்தமான சொத்தை மாநில அரசுகள் கையகப்படுத்தலாம் என இந்திய அரசியல் சாசனத்தின் 39 (பி)-வது பிரிவு கூறுகிறது. அதேநேரம் இதற்காக மாநில அரசுகள் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதை எதிர்த்து கடந்த 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 2002-ம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. பொதுநலன் என்ற பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், 9 நீதிபதிகளில் 7 : 2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
» தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை: நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
» அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை சரிபார்க்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிந்தல், எஸ்.சி.சர்மா மற்றும் ஏ.பி.மாசி ஆகியோர் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பி.வி.நாகரத்னா இந்த தீர்ப்பை பகுதி அளவில் ஏற்றுக்கொண்டார். ஆனால் நீதிபதி துலியா இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
கர்நாடக அரசு மற்றும் ரங்கநாத ரெட்டி இடையிலான வழக்கில் தனியார் சொத்துகளை பொதுநலனுக்காக கையகப்படுத்தலாம் என நீதிபதி கிருஷ்ண அய்யர் கடந்த 1978-ல் தீர்ப்பு வழங்கி இருந்தார். இதை அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன் அதை ரத்து செய்து உத்தரவிட்டனர்