தனியார் சொத்துகள் - உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு: பொதுநலன் என்ற பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. பொது நலனுக்கு தேவைப்பட்டால் தனியாருக்கு சொந்தமான சொத்தை மாநில அரசுகள் கையகப்படுத்தலாம் என இந்திய அரசியல் சாசனத்தின் 39 (பி) பிரிவு கூறுகிறது. அதேநேரம் இதற்காக மாநில அரசுகள் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதை எதிர்த்து கடந்த 1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 2002-ம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. பொதுநலன் என்ற பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 9 நீதிபதிகளில் 7 : 2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிந்தல், எஸ்.சி.சர்மா மற்றும் ஏ.பி.மாசி ஆகியோர் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பி.வி.நாகரத்னா இந்த தீர்ப்பை பகுதி அளவில் ஏற்றுக்கொண்டார். ஆனால் நீதிபதி துலியா இந்த தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். கர்நாடக அரசு மற்றும் ரங்கநாத ரெட்டி இடையிலான வழக்கில் தனியார் சொத்துகளை பொதுநலனுக்காக கையகப்படுத்தலாம் என நீதிபதி கிருஷ்ண அய்யர் கடந்த 1978-ல் தீர்ப்பு வழங்கி இருந்தார். இதை அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன், அதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கோவையில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் திறப்பு: கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். மேலும், இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
» “சிறுவாணி அணை விவகாரத்தில் கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை” - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
நவ.7 முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் வரும் 7-ம் தேதியன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது. குறிப்பாக, 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திமுக கூட்டணி தொடரும்” - திருமாவளவன் திட்டவட்டம் - “மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி. எனவே, எங்களுக்கான கூட்டணியை சிதறடிக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக இனி பேச வேண்டாம்” என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.25-ல் தொடக்கம்: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
“கனடாவில் தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம்...” - ஜெய்சங்கர்: கனடாவின் பிராம்டனில் இந்து கோயில் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம் அளித்துள்ளதாக சாடினார்.
விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்: ஆன்லைன் கலைக்களஞ்சியம் என கூறிக்கொள்ளும் விக்கிபீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நோட்டீஸில், "விக்கிப்பீடியா வெளியிடும் தகவல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானதாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. விக்கிப்பீடியாவின் பக்கங்களை உருவாக்குவதிலும், திருத்தம் செய்வதிலும் ஒரு சிறிய குழு ஈடுபட்டு வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. விக்கிப்பீடியாவை இடைத்தரகராக கருதாமல், ஒரு வெளியீட்டாளராக ஏன் கருதக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி பூர்விக கிராமத்தில் வழிபாடு: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் தர்ம சாஸ்தா கோயிலில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வருத்தம் தெரிவித்த நடிகை கஸ்தூரி: “அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். அன்றைய என்னுடைய உரையில் இடம் பெற்ற முக்கியமான கருத்துகளை இந்த சர்ச்சை தேவையில்லாமல் திசை திருப்பி இருக்கிறது” என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். மேலும், “குடும்பம் போன்ற எனது தெலுங்கு சமூகத்தை புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கமல்ல. கவனக்குறைவாக அப்படி எதுவும் நடந்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறுமி கொலையில் பரபரப்பு வாக்குமூலம்: சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் முகமது நிஷாத், இவரது மனைவி நாசியா ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அமர்த்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முகமது நிஷாத் வீட்டின் குளியல் அறையில் சிறுமி உடல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீஸார் நடத்திய விசாரணையில் முகமது நிஷாத் குடும்பத்தினர் சிறுமியை சித்ரவதை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து தம்பதி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் போலீஸாரிடம் நாசியா அளித்த வாக்குமூலத்தில், சிறுமி மீது தனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால், ஆத்திரமடைந்து சிறுமிக்கு திருட்டுப்பட்டம் சுமத்தி, தினமும் சித்ரவதை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறுமியின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், சிறுமியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல பெற்றோரிடம் பணமில்லை. இதனால் சென்னையிலேயே சிறிமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்: பிளாக் பக் மானைக் கொன்றதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் எங்கள் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தொகை வழங்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் புதிய மிரட்டல் விடுத்துள்ளது.