உத்தராகண்ட் பஸ் விபத்து முதல் கனடாவில் கோயில் மீதான தாக்குதல் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

உத்தராகண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 36 பேர் பலி: உத்தராகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். பவுரி கார்வால் மாவட்டம் நைனி தண்டாவில் இருந்து புறப்பட்ட ஒரு பேருந்து, சுமார் 40 பயணிகளுடன் நைனிடால் மாவட்டம் ராம்நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் அந்த பஸ் கீத் ஜாகிர் ஆற்றங்கரையில் அல்மோரா மாவட்டம் சரத் பெண்ட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் அருகில் இருந்த சுமார் 150 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இதுகுறித்து அல்மோரா மாவட்ட பேரிடர் நிர்வாக அதிகாரி வினீத் பால் கூறும்போது, “பஸ் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீஸார், மாநில பேரிடர் மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எங்களுடைய படையினரும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உ.பி, கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: உத்தரப் பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட்: பிரதமர் மோடி விமர்சனம்: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக அம்மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் வங்கதேச ஊடுருவல்காரர்களின் ஆதரவாளர்கள் என்று விமர்சித்தார்.

‘வயநாடு நிலச்சரிவை அரசியலாக்கும் பாஜக’ - கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை பாஜக அரசியலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வயநாடு மாவட்டத்தின் கெனிச்சிராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்க தவறவில்லை. வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் உங்களுக்காக உறுதியான குரலை எழுப்புவேன்” என்றார்.

விஜய் மீது ஸ்டாலின் மறைமுக சாடல்: “திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை” என்று தவெக தலைவர் விஜய்யை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் வெற்றி பெறுவதற்கு சமவாய்ப்பு உள்ளதால் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏமாற்றமளிக்கும் 2-ம் காலாண்டு நிதி நிலை முடிவுகள், நவம்பர் 7-ல் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் பாலிசி கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் நிதானமாகவும், லாப நோக்குடனும் செயல்பட்டதால் சந்தையில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 309 புள்ளிகள் அதாவது 1.27 சதவீதம் சரிந்து 24,000-க்கும் கீழ் சென்று 23,995 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோன்று, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1.18 சதவீதம் அதாவது 941 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,782 புள்ளிகளில் நிலைகொண்டது. அக்டோபர் 3-ம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல்முறை. திங்கள்கிழமை வர்த்தகத்தில் பங்குகளின் விலை கணிசமாக சரிவடைந்ததையடுத்து முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் பலப்பரீட்சை: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடையும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே சமபலத்துடன் பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: ட்ரூடோ கண்டனம் - கனடாவின் டொரண்டோ மாகாணத்திலுள்ள இந்து கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனைக் கண்டித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “பிராம்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல் துறைக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

கனடா சம்பவம்: இந்தியா கடும் கண்டனம்: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “கனடாவில் உள்ள இந்து கோயில் மீது, இந்துக்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதுதொடர்பாக கனடா நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, அங்குள்ள இந்துக்கள், இந்துக் கோயில்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இந்திய மக்களுக்குத் தேவையான சேவைகளை கனடாவிலுள்ள தூதரகம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

‘கூகுளில் 25% புரோகிராம் Code-களை ஏஐ எழுதுகிறது’ - கூகுளின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பேசுகையில், கூகுள் நிறுவன மென்பொருள் சார்ந்த புரோகிராம் Code-களில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் எழுதி வருவதாக அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE