பாஜக இதுபோல பலவீனமாக இருந்ததில்லை: இடைத்தேர்தல் தேதி மாற்றத்துக்கு அகிலேஷ் யாதவ் விமர்சனம்

By KU BUREAU

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலை மாற்றிய தேர்தல் ஆணையத்தின் முடிவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக இது பாஜகவின் பழைய தந்திரம் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘முதலில் மில்கிபூர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாஜக இதுபோல ஒருபோதும் பலவீனமாக இருந்ததில்லை.

தேர்தலை அவர்கள் (பாஜக) ஒத்திவைத்தால், அவர்கள் இன்னும் மோசமாக தோற்க நேரிடும். உ.பி.யில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, வேலை நிமித்தமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மக்கள், தீபாவளி மற்றும் சத் விடுமுறை நாட்களில் உ.பி.க்கு வந்துள்ளனர். அவர்கள் பாஜகவை தோற்கடிக்க இடைத்தேர்தலில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதே உண்மை. பாஜக இதைப் புரிந்து கொண்டவுடன், இடைத்தேர்தலை ஒத்திவைத்துள்ளது. இதனால் மக்கள் விடுமுறை முடிந்து வாக்களிக்காமல் திரும்பிச் செல்கிறார்கள்’ என்று கூறினார்.

கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தேதியை திடீரென மாற்றியுள்ளது தேர்தல் ஆணையம். முன்னர் நவம்பர் 13 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு, தற்போது நவம்பர் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 23 அன்று வாக்குகள் எண்ணப்படுகிறது.

கல்பதி ரஸ்தோல்சவம் (நவம்பர் 13-15), கார்த்திக் பூர்ணிமா (நவம்பர் 15) மற்றும் ஸ்ரீ குரு நானக் தேவ் (நவம்பர் 15) இன் பிரகாஷ் பர்வ் போன்ற திருவிழாக்களை குறிப்பிட்டு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமென பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததால் இம்முடிவை எடுத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மற்றும் பஞ்சாபின் தேரா பாபா நானக், சப்பேவால், கிடர்பாஹா மற்றும் பர்னாலா தொகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மீராபூர், குண்டர்கி, காஜியாபாத், கைர், கர்ஹால், சிஷாமாவ், புல்பூர், கட்டேஹாரி, மஜவன் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE