பெங்களூரு: முடா நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 6ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்படும்.
முடா நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வரின் மனைவி பார்வதியிடம் அக்டோபர் 25ஆம் தேதி லோக் ஆயுக்தா போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “ஆம், மைசூர் லோக்ஆயுக்தா முடா தொடர்பான சம்மனை அனுப்பியுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி மைசூர் லோக் ஆயுக்தா அலுவலகக்குச் செல்வேன்” என்று கூறினார். லோக்ஆயுக்தாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதன்கிழமை காலை அவரை ஆஜராகும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம்” என்றார்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.
» ‘பணியை சிறப்பாக செய்யுங்கள், இல்லையென்றால்...’ : ஆந்திர உள்துறை அமைச்சரை எச்சரித்த பவன் கல்யாண்
» பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தவில்லை: டெல்லி போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தது. இது பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், முதலமைச்சரின் மனைவி 14 மனைகளையும் முடாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளார். எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றன
இந்த வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தாவும் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர். இதில் சித்தராமையா முதலாவது நபராகவும், அவரது மனைவி பார்வதி 2-வது நபராகவும், மூத்த மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி 3-வது நபராகவும், இளைய மைத்துனர் தேவராஜ் 4-வது நபராகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சித்தராமையா, மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜ் ஆகியோருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு ஆகிய ஊர்களில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.