உ.பி, கேரளா மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு

By KU BUREAU

புதுடெல்லி: கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தேதியை திடீரென மாற்றியுள்ளது தேர்தல் ஆணையம். முன்னர் நவம்பர் 13 ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு, தற்போது நவம்பர் 20 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 23 அன்று வாக்குகள் எண்ணப்படுகிறது.

கல்பதி ரஸ்தோல்சவம் (நவம்பர் 13-15), கார்த்திகை பூர்ணிமா (நவம்பர் 15) மற்றும் ஸ்ரீ குரு நானக் தேவ் (நவம்பர் 15) இன் பிரகாஷ் பர்வ் போன்ற திருவிழாக்களை குறிப்பிட்டு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமென பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த திருவிழாக்கள் இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவை பாதிக்கலாம் என்று கட்சிகள் கூறியிருந்தன.

உத்தரபிரதேசத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள், பஞ்சாபில் நான்கு மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தலுடன் இணைந்து நடைபெறும் இந்த இடைத்தேர்தல்களில் 15 மாநிலங்களில் மொத்தம் 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மற்றும் பஞ்சாபின் தேரா பாபா நானக், சப்பேவால், கிடர்பாஹா மற்றும் பர்னாலா தொகுதிகள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மீராபூர், குண்டர்கி, காஜியாபாத், கைர், கர்ஹால், சிஷாமாவ், புல்பூர், கட்டேஹாரி, மஜவன் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE