ஹைதராபாத்: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் திருமலையில் இந்துக்கள் மட்டுமே பணியாளர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் சேர்க்க விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கிண்டல் செய்துள்ளார்.
இதுபற்றி ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய ஓவைசி, “ திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் 24 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் கூட இந்து அல்லாதவர் இல்லை. ஆனால் தேவஸ்தானத்தின் புதிய தலைவர் அங்கு பணிபுரிபவர்கள் இந்துவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நாங்கள் இதனை எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய வக்ஃப் கவுன்சிலில், 2 முஸ்லிம் அல்லாதவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவில், நரேந்திர மோடியின் அரசு கூறியிருப்பதில், எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. ஏன் இவ்வாறு கொண்டு வருகிறீர்கள்? வக்ஃப் மசோதாவில் இந்த விதி ஏன் வருகிறது? ” என ஓவைசி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, “திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது இந்து மதத்தின் வாரியம். வக்ஃப் வாரியம் என்பது முஸ்லீம் மதத்தின் வாரியம். இதில் சமத்துவம் இருக்க வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாதபோது, முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்பு வாரியத்தில் எப்படி இருப்பார்?” என கேள்வி எழுப்பினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். நாயுடு, “திருமலையில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும். அதுவே எனது முதல் முயற்சியாக இருக்கும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை நாம் ஆராய வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்த ஊழியர்களைக் கையாள்வது குறித்து ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் விவாதிக்க உள்ளோம். அவர்களுக்கு தன்னார்வ ஓய்வு திட்டம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க உள்ளோம் ” என்று கூறியிருந்தார்.
» காஞ்சிபுரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை
» சாக்லேட் தருவதாக ஏமாற்றி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினர் கைது