பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபெக் டெப்ராய் மரணம்: உருக்கமான இரங்கல்

By KU BUREAU

புதுடெல்லி: தனது பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், சிறந்த பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ராய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘டாக்டர் டெப்ராய்யை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்வி தொடர்பான ஆர்வத்தை நான் அன்புடன் நினைவுகூர்வேன். அவரது மறைவால் வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். டாக்டர் பிபேக் டெப்ராய் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.

டெப்ராய் தனது படைப்புகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு "அழியாத முத்திரையை" விட்டுச் சென்றுள்ளார். பொதுக் கொள்கைக்கான அவரது பங்களிப்புகளுக்கு அப்பால், அவர் நமது பண்டைய நூல்களில் பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைந்தார், அவற்றை இளைஞர்களுக்கு அணுகும்படி செய்தார்’ என அவர் குறிப்பிட்டார்.

பிபெக் டெப்ராய் தனது 69 வயதில் குடல் அடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற டெப்ராய், புனேவில் உள்ள கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (ஜிஐபிஇ)யின் வேந்தராக பணியாற்றியுள்ளார். 'அம்ரித் காலின்' உள்கட்டமைப்பு வகைப்பாடு மற்றும் நிதிக் கட்டமைப்பிற்கான நிதி அமைச்சகத்தின் நிபுணர் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

டெப்ராய், வறுமை, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் ரயில்வே சீர்திருத்தங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் 2015 முதல் 2019 வரை இந்திய அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் உறுப்பினராக இருந்தார்.

2016 ஆம் ஆண்டில், அமெரிக்க-இந்தியா வணிக உச்சிமாநாட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது டெப்ராய்க்கு வழங்கப்பட்டது. 2022 இல் ஆஸ்திரேலியா-இந்திய வர்த்தக சம்மேளனத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE