தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள்: டெல்லியில் மிகவும் மோசமானது காற்று மாசு!

By KU BUREAU

புதுடெல்லி: நேற்றைய தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை மக்கள் மீறியதால், டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. நேற்று இடைவிடாமல் பட்டாசுகளை வெடித்தது கடும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தியதுடன், நகரை அடர்த்தியான புகையால் மூடியது.

காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) வழங்கிய தரவுகளின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) இன்று காலை 6:30 மணிக்கு 359 ஆக உயர்ந்தது, இது "மிகவும் மோசமான" பிரிவின் கீழ் வருகிறது. நேற்று காலை காற்றின் தரக் குறியீடு 328 ஆக இருந்தது.

0 மற்றும் 50க்கு இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு நல்லதாகவும், 51 மற்றும் 100 இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு திருப்திகரமாகவும், 101 மற்றும் 200 இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு மிதமானதாகவும், 201 மற்றும் 300 இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு மோசமானதாகவும், 301 மற்றும் 400 இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமானதாகவும், 401 மற்றும் 450க்கு இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு கடுமையானதாகவும் கருதப்படுகிறது.

நுரையீரல் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழையும் PM2.5 எனப்படும் ஆபத்தான நுண் துகள்கள்களின் அளவு, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தினசரி அதிகபட்ச அளவைவிட டெல்லியில் 23 மடங்கு அதிகரித்துள்ளது. நகரத்தில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு நிலை "மிகவும் மோசமான" பிரிவில் உள்ளது. ஆனந்த் விஹார் மற்றும் ஆர்.கே. புரம் ஆகியவை மோசமான காற்றின் தரக் குறியீடு 395ஐப் பதிவு செய்துள்ளன.

புராரி கிராசிங் (394), சோனியா விஹார் (392), பஞ்சாபி பாக் (391), வடக்கு வளாகம் (390), பவானா (388), ஜஹாங்கிர்புரி (387), ரோகினி (385), அசோக் விஹார் (384), மற்றும் நேரு நகர் (381) ) "மிகவும் மோசமான" காற்றின் தரம் கொண்ட வேறு சில இடங்கள் ஆகும். புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), தேசிய தலைநகரில் காற்றின் தரம் இன்றும் "மிகவும் மோசமான" பிரிவில் (AQI 300 முதல் 400 வரை) இருக்கும் என்று கூறியுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக, தலைநகர் முழுவதும் பட்டாசு தடையை அமல்படுத்த 377 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்தார். அந்தந்த மாவட்டங்களில் பட்டாசு வெடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து துணை போலீஸ் கமிஷனர்களும் (டிசிபி) பிரத்யேக குழுக்களை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, நவம்பர் 12 அன்று தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 218 ஆக இருந்தது. இது முந்தைய 8 ஆண்டுகளில் இருந்ததை விட சிறப்பான நிலை ஆகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE