போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 7 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 3 யானைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த ஏழு யானைகளின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இதனையடுத்து ஜபல்பூரில் உள்ள வனவிலங்கு தடயவியல் மற்றும் மருத்துவப் பள்ளியில் யானைகளுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநில அரசின் மருத்துவர்கள் மற்றும் கன்ஹா காடுகளைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் பிரதேப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் விவசாயிகள் பயிர்கள் மீது பூச்சிக்கொல்லிகளை தெளித்ததாகவும், அது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 யானைகளை கொண்ட இந்த யானை கூட்டத்தில் 7 யானைகள் உயிரிழந்ததாகவும், 3 யானைகள் சிகிச்சையில் உள்ளதாகவும், 2 யானைகள் நல்ல நிலையில் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மத்திய மண்டலத்துக்கான உதவி ஆய்வாளர்-ஜெனரல் நந்தகிஷோர் காலே உள்ளிட்ட மூத்த வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். யானைகள் வேட்டை குறித்த கவலைகளுக்கு மத்தியில், டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம், இந்த 7 யானைகள் இறப்பு குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. அதேசமயம், மாநில அளவிலான விசாரணையும் நடந்து வருகிறது.
» நடிகர் தர்ஷனுக்கு 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன்: மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, காப்புக்காடு பகுதியில் வழக்கமான ரோந்து பணியின் போது இரண்டு யானைகள் இறந்து கிடந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஐந்து யானைகள் அருகில் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.
பாந்தவ்கர் காப்புக்காட்டில், புலிகள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வது சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 2021 மற்றும் 2023 க்கு இடையில் பந்தவ்கர் மற்றும் ஷாஹ்டோல் வனப் பகுதியில் 43 புலிகள் இறந்தன. இதற்கு வேட்டையாடுதல் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தன.