ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீதான தாக்குதலுக்கு பிறகு 27 மணிநேர நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக நேற்று முன்தினம் காலையில் ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது ராணுவ வாகனங்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்ற தீவிரவாதிகளை கண்டறிய கூடுதல் வீரர்கள் அழைக்கப்பட்டு, விரிவான தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெலிகாப்டர், ட்ரோன்கள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலையில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் ராணுவத்தின் 'ஒயிட் நைட் கார்ப்ஸ்' வெளியிட்ட பதிவில், “இரவு முழுவதும் மேற்கொண்ட தீவிர கண்காணிப்புக்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நமது படைகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. இடைவிடாத நடவடிக்கையும் சிறந்த உத்திகளும் 3 தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு வழி வகுத்தது. இந்த நடவடிக்கையில் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகளை நெருங்கியபோது அவர்கள் உக்கிரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 4 வயது ராணுவ நாய் 'பாந்தோம்' குண்டு பாய்ந்து உயிரிழந்தது. "நமது உண்மையான நாயகன் பாந்தோமின் உன்னத தியாகத்திற்கு தலைவணங்குகிறோம்" என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது