கேரளாவில் கோயில் திருவிழாவில் வெடித்து விபத்து: 150 பேர் காயம் - கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வடக்கு மலபார் பகுதியில் உள்ள அஞ்சூட்டம்பலம் வீரேர்காவு கோயில் திருவிழா திங்கள்கிழமை இரவு கோலாகலமாக தொடங்கியது. அப்போது, வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு குடோனில் விழுந்ததை அடுத்து மொத்தமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. அப்போது மிகப் பெரிய அளவுக்கு தீப்பிழம்பு உருவானது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 97 பேர் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் தீக்காயங்களுடன் கிசிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்! - தமிழகத்தில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 8,964 பேர் உள்ளனர். மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது.
குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் உள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 16, 17 மற்றும் நவம்பர் 23-24 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில், பொதுவாக, வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
» ‘தந்தேராஸ்’ ஜோர் - தங்கம் ரூ.20,000 கோடிக்கு விற்பனை; நாட்டில் மொத்த வர்த்தகம் ரூ.60,000 கோடி!
» பாலஸ்தீனத்திற்கு 30 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை அனுப்பியது இந்தியா
டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: டான்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி செலவில் இந்த, 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“ஆக்கபூர்வ ஆலோசனைகளை கருத்தில் கொள்வோம்” - விஜய்: “நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? - இபிஎஸ் கருத்து: “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
“பாஜக எதிர்ப்பில் தவெக உறுதியாக இல்லை” - திருமாவளவன்: “பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “முதல் அடியே எடுத்து வைக்காத தமிழக வெற்றிக் கழகம், அதிகாரத்தில் பகிர்வு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை, ஏற்புடையதாகவும் இல்லை. அதிமுக, பாஜகவை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களா, எதிரிகளா என்று தொண்டர்களுக்கு அடையாளப்படுத்தவில்லை. அவர், திமுகவை எதிரி என்று அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார். திமுக எதிர்ப்பு நெடி, திமுக அரசுக்கு எதிரான அரசியல் என்பதுதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இது பழைய அரசியல்தான். ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் பேசியதுதான். அவருக்கு எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆளுநர் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அமைச்சர்கள்! - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை வெடித்தது முதலே ஆளுநர் விழாக்களை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆய்வு மாணவர் ஒருவர், பல்கலைக்கழகத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் மேடையிலேயே புகார் மனு ஒன்றை அளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹிஸ்புல்லா புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு: லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை: தங்கத்தின் விலை பவுன் ரூ.59,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.59,000-க்கு விற்பனை ஆனது. இது தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
“டெல்லி, மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” - பிரதமர்: “மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்து வருவதால் இத்திட்டத்தின் பயன்களை அம்மாநில மக்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு: தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 31 - தீபாவளி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.