‘தந்தேராஸ்’ ஜோர் - தங்கம் ரூ.20,000 கோடிக்கு விற்பனை; நாட்டில் மொத்த வர்த்தகம் ரூ.60,000 கோடி!

By KU BUREAU

மும்பை: தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ‘தந்தேராஸ்’ (Dhanteras) பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் ரூ.60,000 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாகவும், தங்கம் மட்டும் ரூ.20,000 கோடிக்கு விற்பனை ஆனதாகவும் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) மதிப்பிட்டுள்ளது.

‘நாடு முழுவதும் இன்று (அக்.29) ரூ.60,000 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இதில், 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் விற்பனையும், 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளி விற்பனையும் அடங்கும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

தங்கத்தின் விலை பவுன் ரூ.59,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.59,000-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

தந்தேராஸ் என்ன ஸ்பெஷல்?: இந்தியாவில், குறிப்பாக வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை என்பது 5 நாட்கள் கொண்டாட்டப்படுகிறது. அதில் ஒரு சிறப்பு நாள்தான் ‘தந்தேராஸ்’ பண்டிகை.

தந்தேராஸ் என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி 'தேராஸ்' என்பதற்கு 13வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு இன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தந்தராஸ் நாளில் மாலையில் வீட்டில் விளக்குகள் ஏற்றி, லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்து பாரம்பரியத்தின் படி, புதிய கொள்முதல், குறிப்பாக தங்கம் அல்லது வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கு தந்தேராஸ் மிகவும் நல்ல நாள் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் என்று நம்பப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE