பாலஸ்தீனத்திற்கு 30 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை அனுப்பியது இந்தியா

By KU BUREAU

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் 30 டன் மருத்துப் பொருட்களை பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது பதிவில், "பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் ஆதரவு தொடர்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அத்தியாவசிய உயிர்காக்கும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை உள்ளடக்கிய 30 டன் மருத்துவப் பொருட்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம், ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA) மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தனது முதல் தவணை உதவியை அனுப்பியது, அதில் 30 டன் மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கும்” என்று அவர் கூறினார்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் இரு நாடுகளின் தீர்வுக்கு இந்தியா நீண்டகாலமாக ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். மேலும், காஸாவின் மோசமான நிலைமை குறித்து பலமுறை கவலை தெரிவித்தார். இந்தியா தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியது. ஜூலை மாதம், 2024-25 ஆம் ஆண்டில் பாலஸ்தீன அகதிகளுக்காக ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்துக்கு இந்தியா முதல் தவணையாக 2.5 மில்லியன் டாலர்களை வழங்கியது.

கடந்த மாதம், காசாவில் மக்கள் "மனிதாபிமானமற்ற" சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் கூறியது. மத்திய காசாவில் கழிவுகள் குவிந்து வருவதாகவும், அதே நேரத்தில் கழிவுநீர் தெருக்களில் கசிந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "குடும்பங்கள் இந்த குவிக்கப்பட்ட கழிவுகளுக்கு இடையில் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. துர்நாற்றம் மற்றும் சுகாதார பேரழிவின் உடனடி ஆபத்தை வெளிப்படுத்துகிறது" என்று கூறிய ஐ.நா அமைப்பு உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதற்கிடையில், இஸ்ரேலின் பாராளுமன்றம் பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியை (UNRWA) தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தடையானது ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை முழுவதும் ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தின் செயல்பாடுகளை கணிசமாக கட்டுப்படுத்தும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE