அன்னை தெரேசா எனது வீட்டுக்கு வந்து என்னை ஆசீர்வதித்தார் என்று காங்கிரஸ் பொதுச் செயலரும், வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது கேரள மாநிலம் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 23-ம் தேதி வயநாட்டுக்கு வந்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் நாட்டில் ரோட் ஷோவை நடத்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
» பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் புதிய அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
» மாணவியை தாக்கிய விவகாரம்: ஓசூர் அருகே உடற்கல்வி ஆசிரியர் கைது
பின்னர் மீனங்காடி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது தனது வீட்டுக்கு அன்னை தெரேசா வந்த நிகழ்வை வயநாடு தொகுதி மக்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி பேசியதாவது: இங்கே எனக்குக் கிடைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். அப்போது பல்வேறு தரப்பு மக்களோடு நான் பேசினேன். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர். அவர் என்னிடம், தனது அம்மா என்னை சந்திக்க விரும்புவதாகவும், அவரால் நடக்க முடியாது என்றும் கூறினார். இதையடுத்து நான் அவருடைய வீட்டுக்குச் சென்று அந்த தாயை சந்தித்தேன்.
அந்த வீட்டில் இருந்த வயதான தாயார், என்னை அவரது குழந்தையைப் போல் பாவித்து என்னை கட்டிப்பிடித்தார். வயநாட்டில் எனக்கு ஓர் தாய் இருப்பது போல் உணர்ந்தேன். அவர் என்னிடம் ஒரு ஜெபமாலையை கொடுத்தார். அதனை நான் எனது அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது கடந்த கால சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த சம்பவத்தை இதுவரை நான் பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது. பொருத்தமாக இருப்பதால் இப்போது பகிர்கிறேன்.
அப்போது எனக்கு 19 வயது இருக்கும். என் தந்தை இறந்து 6 அல்லது 7 மாதங்களுக்குப் பிறகு, அன்னை தெரேசா, என் தாயாரை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்தார். காய்ச்சல் காரணமாக நான் படுக்கையிலேயே இருந்தேன். அறையை விட்டு வெளியே வராமல் இருந்த என்னைப் பார்க்க அன்னை தெரேசா எனது அறைக்கே வந்தார். என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அப்போது எனக்கு ஒரு ஜெபமாலையை கொடுத்தார்.
அப்பா இறந்த சோகத்தாலும், காய்ச்சல் காரணமாகவும் நான் மிகவும் சோர்வுடன் இருந்ததை அறிந்த அவர், நீங்கள் என்னோடு சேர்ந்து சேவை செய்ய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
5 அல்லது 6 வருடங்களுக்குப் பிறகு, எனக்கு திருமணமாகி, எனக்கென்று குடும்பம் என ஆன பிறகு டெல்லியில் அன்னை தெரேசாவின் சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி சொல்லிக் கொடுப்பேன். முதல்முறையாக இதை நான் பொதுவெளியில் பகிர்கிறேன். அதுவும் பொருத்தமாக இருப்பதால்தான் இந்தத் தகவலை நான் சொல்கிறேன்.
குளியலறையை சுத்தம் செய்வது, தரையை சுத்தம் செய்வது, சில நேரங்களில் சமைப்பது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை அப்போது செய்தேன். அப்போதுதான் அவர்களின் துயரம், வலி ஆகியவற்றை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு நாம் ஒன்றாக சேர்ந்து உதவ முடியும் என்பதும் புரியவந்தது.
வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு நான் எனது சகோதரர் ராகுல் காந்தியோடு நான் இங்கு வந்தேன். அப்போது, சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்பதை நேரில் அறிந்து கொண்டேன். என்ன மதம், என்ன தொழில் என்ற பேதம் இன்றி வயநாடு மக்கள் அனைவரும் மற்றவர்களுக்கு உதவியதைப் பார்த்தேன். பேரழிவு நேரங்களில் பேராசையுடன் மனிதர்கள் சிலர் செய்யும் செயல்களை நான் இங்கு பார்க்கவில்லை. குழந்தைகள்கூட பெருமித உணர்வுடனே எங்களிடம் பேசினர். அசாத்திய துணிச்சல் உங்களிடம் இருப்பதை அப்போது நான் பார்த்தேன். இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்