புது டெல்லி: யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு அதிகமாக இருப்பதால், தலைநகரின் பல பகுதிகளில் நவம்பர் 1-ஆம் தேதி வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என டெல்லி ஜல் போர்டு அறிவித்துள்ளது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் தெற்கு டெல்லியின் பல பகுதிகள் மற்றும் புதுடெல்லி முனிசிபல் கவுன்சிலின் கீழ் உள்ள பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
இது தொடர்பாக டெல்லி ஜல் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் மேல் கங்கை நதியின் நீரை மூல ஆதாரமாக பெற்று டெல்லியின் 110 MGD (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்கள்) பாகீரதி நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 140 MGD சோனியா விஹார் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. மேல் கங்கை கால்வாயின் குறுக்கே திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பு காரணமாக உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறை அக்டோபர் 12 முதல் 31 வரை இந்த கால்வாய் மூடப்பட்டது.
இந்த மூடல் காலத்தில், உத்தரப்பிரதேச நீர்ப்பாசனத் துறை மற்றும் உ.பி. ஜல் நிகாம் ஆகியவை பழுது மற்றும் பராமரிப்பை மேற்கொள்கின்றன. அதைத் தொடர்ந்து, இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கங்கை நீர் வழங்கல் நிறுத்தப்பட்டது. எனவே நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது அக்டோபர் 31 வரை மாற்று நீர் ஆதாரமாக யமுனையைச் சார்ந்துள்ளன. ஆனால் யமுனை நீரில் அதிகளவு அம்மோனியா (1.5 ppm பார்ட்ஸ் பர் மில்லியன்) இருப்பதால், யமுனையின் நீரை சுத்திகரிப்பு செய்வது கடினம். எனவே, பாகீரதி மற்றும் சோனியா விஹாரில் உற்பத்தி 30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உற்பத்தியானது யமுனையில் உள்ள கச்சா நீரின் தரத்தைப் பொறுத்து அதற்கேற்ப மாறுபடும்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லி மக்கள் அவர்களின் தேவைகளின் அடிப்படையில் முன்கூட்டியே போதுமான அளவு தண்ணீரை சேமித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஜல் போர்டு ஹெல்ப்லைன் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து தேவைக்கேற்ப தண்ணீர் டேங்கர்கள் கிடைக்கும் எனவும் ஜல்போர்டு தெரிவித்துள்ளது.
» தீபாவளி பக்கெட் பிரியாணி சலுகைகள் - களைகட்டும் புக்கிங் @ தேனி
» புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ விவகாரத்தில் சபாநாயகருக்கு கண்டனம்: பொதுநல அமைப்புகள் தர்ணா