மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்காக 23 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் மாநில பாஜக தலைவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

மொத்தம் 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளை கொண்ட ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இங்கு எம்விஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் 255 இடங்களுக்கு தொகுதி உடன்பாடு எட்டியுள்ளன. இதன்படி மூன்று கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடுகின்றன. மேலும் 16 இடங்களை இக்கட்சிகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவு செய்தன. எஞ்சிய 15 இடங்களை இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்க உள்ளன.

காங்கிரஸ் கட்சி 48 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் 23 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில் மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. நாக்பூர் மாவட்டம் காம்தி தொகுதியில் பவன்குலே மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு அவர் 2004, 2009 மற்றும் 2014 ல் நடைபெற்ற தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றார். எனினும் 2019 தேர்தலில் அவர் தோல்வியுற்றார். தற்போது இங்கு மீண்டும் போட்டியிடும் அவருக்கு எதிராக நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சுரேஷ் ஒய்.போயரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

இதுபோல் நாக்பூர் மாவட்டம் சாவ்னெர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் 5 முறை எம்எல்ஏவுமான சுனில் சி.கேடாரின் மனைவி அனுஜாவுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது. இத்தொகுதி எம்எல்ஏவான சுனில் கேடார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் தகுதி இழப்புக்கு ஆளானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE