மும்பை: அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர தங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸின் மகாராஷ்டிரா பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, “என்சிபியில் (அஜித் பவார் அணி) சேர இரண்டு எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. உள்துறை பொறுப்பில் இருக்கும் முதல்வர் அமைதியாக இருப்பது ஏன்?. என்ன நடந்தது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றச் செயலாகும்” என்று கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அஜித் பவார் தலைமையிலான என்சிபி பிரிவு இன்னும் பதிலளிக்கவில்லை.
தனது கட்சியின் இரண்டாவது பட்டியலில் 23 வேட்பாளர்களை அறிவித்த ஒரு நாளில் காங்கிரஸ் தலைவரிடமிருந்து இந்த குற்றச்சாட்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
மகாராஷ்டிரா தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், என்சிபி (சரத்பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே ) மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சிகள் ஆளும் மகாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
» இந்திய அணி படுதோல்வி; 11 ஆண்டுகால வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது நியூசிலாந்து அணி!
» டெல்லியில் அதிர்ச்சி: ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி வாக்குப் பதிவும், நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.