ஜார்க்கண்ட் தேர்தலுக்கான விளம்பர தூதராக தோனி நியமனம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By KU BUREAU

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் தோனியின் புகைப்படத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரவி குமார் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரவி குமார் "மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விவரங்களுக்கு அவரைத் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களைத் திரட்டும் பணியில் மகேந்திர சிங் தோனி பணியாற்றுவார்" என்று கூறினார்.

அனைவரும் நேர்மையாக வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க தோனி பணியாற்றுவார். குறிப்பாக வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய தோனியை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டசபையின் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு), ஐக்கிய ஜனதா தளம் , லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களிலும், ஏஜேஎஸ்யு 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், எல்ஜேபி ஒரு இடத்திலும் போட்டியிடும்.

அதேபோல ஜேஎம்எம் கட்சியின் கூட்டணியில் அக்கட்சி 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 6 தொகுதிகளிலும், சிபிஎம்எல் கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE