ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற ஆந்திர தலைவர்கள் தெலங்கானாவிற்குள் நுழைய தடை விதிக்கும் தீர்மானத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ அனிருத் ரெட்டி எச்சரித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தெலங்கானா தலைவர்களின் பரிந்துரை கடிதங்களை திருப்பதி தேவஸ்தானம் ஏற்க மறுத்தால், ஆந்திரா தலைவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடை செய்ய எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏ அனிருத் ரெட்டி கூறினார்.
தெலங்கானா எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரை கடிதத்தை திருமலை கோயில் ஏற்க மறுத்ததற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஆகஸ்ட் மாதம் தெரிவித்த ‘தெலங்கானாவில் இருந்து எந்த கடிதத்தையும் அவர்கள் ஏற்க மாட்டோம்’ என்ற அறிக்கை குறித்து அனிருத் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சந்திரபாபு நாயுடு தனக்கு இரண்டு கண்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஒன்று தெலங்கானாவுக்கும், ஒன்று ஆந்திராவுக்கும் என கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறிக்கை குறித்து, நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் கண்ணுக்கு என்ன ஆனது?.
» திருவள்ளூரில் ஆடிட்டர் தற்கொலை: உருக்கமான கடிதத்தை கைப்பற்றிய போலீஸார்
» பாபா சித்திக்கின் மகன் அஜித் பவாரின் என்சிபி கட்சியில் இணைந்தார் - காங்கிரஸ் அதிர்ச்சி
ஒரு ஆந்திர எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி தெலங்கானாவில் உள்ள யாதகிரிகுட்டா அல்லது பத்ராசலம் போன்ற கோயில்களுக்குச் செல்ல விரும்பினால், அவர்களின் தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, தெலுங்கு தேசம் கட்சியாக இருந்தாலும் சரி, தெலங்கானாவில் நீங்கள் வரலாற்று ரீதியாக பலனடைந்துள்ளீர்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. நமது மாநிலத் தலைவர்கள் கூடி உங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ஒப்புக்கொண்டால், அதன் வலி உங்களுக்குப் புரியும்” என்று கூறினார்