புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அதிகாரபூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 11-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் நவம்பர் 10-ம்தேதி ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, மரியாதைக்குரிய நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை புதிய தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
» 16 மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்
» சாத்தான்குளம் வழக்கில் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம்
சஞ்சீவ் கண்ணா கடந்த1960-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980-ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா உள்ளார். இந்த சூழலில், அடுத்த தலைமை நீதிபதியாக அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் கண்ணா 2025 மே 13 வரை 6 மாதத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.