மொத்தமாக விட்டுக்கொடுத்த காங்கிரஸ்: உ.பி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கும் சமாஜ்வாதி கட்சி!

By KU BUREAU

லக்னோ: உ.பியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணியின் வேட்பாளர்கள் ஒன்பது தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், ‘காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் ஒன்றுபட்டு, ஒரு பெரிய வெற்றிக்காக தோளோடு தோள் நிற்கின்றன. இந்த இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றியின் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது. இந்த ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன், 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 'இண்டியா கூட்டணியின்' ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான உறுதியுடன் புதிய ஆற்றலால் நிரப்பப்பட்டுள்ளனர்.

நாட்டின் அரசியலமைப்பு, அமைதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் கவுரவத்தைப் பாதுகாப்பதற்காக வரும் தேர்தலில் போராடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13-ஆம் தேதி கடேஹரி (அம்பேத்கர் நகர்), கர்ஹால் (மெயின்புரி), மீராபூர் (முசாபர்நகர்), காசியாபாத், மஜவான் (மிர்சாபூர்), சிஷாமாவ் (கான்பூர் நகரம்), கெய்ர் (அலிகார்), புல்பூர் (பிரயாக்ராஜ்) , மற்றும் குந்தர்கி (மொராதாபாத்) ஆகிய ஒன்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட எஸ்பி எம்எல்ஏ இர்பான் சோலங்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், சிஷாமாவ் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மற்ற எட்டு இடங்கள் காலியாகின. உ.பியில் 10 தொகுதிகள் காலியாக உள்ளன. அதில் மில்கிபூரை (அயோத்தி) தவிர்த்து ஒன்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் முதலில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்து (மில்கிபூர் உட்பட) தொகுதிகளை கோரியிருந்தது. ஆனால் காஜியாபாத் மற்றும் கைர் (அலிகார்) ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்தது. இதனையடுத்து தற்போது எந்த தொகுதியும் வேண்டாமென மறுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, மொத்த இடங்களையும் சமாஜ்வாதி கட்சியிடம் கொடுத்துவிட்டது. இது இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது.

கர்ஹால், சிஷாமாவ், புல்பூர், மில்கிபூர், கடேஹரி, மஜஹவான் மற்றும் மீராபூர் ஆகிய இடங்களுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.

உ.பி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 25 கடைசி நாள் ஆகும். நவம்பர் 13ல் வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE