புதுடெல்லி: கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘எக்ஸ்’ தளம் மூலம் இத்தகைய மிரட்டல்கள் அதிகம் வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாட்டை மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.
மத்திய இணைச் செயலர் சங்கேத் போந்த்வே தலைமையில் விமான நிறுவனங்கள் மற்றும் எக்ஸ், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதள நிறுவன பிரதிநிதிகள் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. அப்போது, சமூக வலைதள நிறுவனங்களின் அலட்சியப் போக்கை சங்கேத் போந்த்வே கண்டித்தார். தங்கள் தளம் மூலம் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுவருவதைத் தடுக்க அந்நிறுவனங்கள் இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த சில நாட்களில், 120-க்கும் மேற்பட்ட இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அவை அவசரமாக தரையிறக்கப்பட்டன. வெடிகுண்டு மிரட்டலால், விமானத்தில் பயணம் செய்வது குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இத்தகைய மிரட்டலில் ஈடுபடுவர்களைக் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மிரட்டல் விடுப்பவர்கள், இனி விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்று மத்திய விமானத் துறை அமைச்சகம் சமீபத்தில் எச்சரித்தது.
இத்தகைய மிரட்டல்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் மத்திய விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தால் அதை உறுதி செய்ய உடனடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு ரூ. 3 கோடி வரை செலவிடப்படுவதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
» அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்
» தீபாவளிக்காக கோவை மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் இயங்க அனுமதி