வயநாடு: 35 ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் தனக்காக ஆதரவு கோருவது இதுவே முதல் முறை என்றும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வயநாட்டில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு, காலை 11:45 மணியளவில் வயநாட்டில் உள்ள கல்பெட்டாவில் இருந்து அவர் ரோட் ஷோவை தொடங்கினார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "நான் எனது தந்தைக்காக (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்காக) பிரச்சாரம் செய்தபோது எனக்கு 17 வயது. பின்னர் நான் எனது தாய் மற்றும் சகோதரர் மற்றும் எனது சக காங்கிரஸ் வேட்பாளர்கள் பலருக்காக பிரச்சாரம் செய்தேன். 35 ஆண்டுகளாக நான் வெவ்வேறு தேர்தல்களில் பிரச்சாரம் செய்து வருகிறேன். ஆனால் எனக்காக பிரச்சாரம் செய்வது இதுவே முதல் முறை. எனக்காக தேர்தலில் பிரசாரம் செய்வதும், உங்களது ஆதரவை நானே தேடுவதும் மிகவும் வித்தியாசமான உணர்வு” என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றி” என்றார்
மேலும், “400 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்த வயநாடு நிலச்சரிவுகளுக்குப் பிறகு நானும், ராகுல் காந்தியும் வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரல்மாலாவுக்குச் சென்றோம். அழிவை நான் என் கண்களால் பார்த்தேன். குடும்பத்தை இழந்த குழந்தைகளைப் பார்த்தேன், குழந்தைகளை இழந்த தாய்களைச் சந்தித்தேன். முழு வாழ்க்கையும் இழந்த மக்களை நான் சந்தித்தேன். நான் சந்தித்த ஒவ்வொரு நபரும் சொன்ன விஷயங்களால் பாதிக்கப்பட்டேன். அவர்களை ஆதரித்து, அவர்களின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு ஒரு பெரிய பாக்கியமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
» கலால் அலுவலகத்தில் நுழைந்து, கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட பள்ளி மாணவர்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி
தொடர்ந்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வயநாடு எனக்கு என்ன செய்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வயநாடு தொகுதிக்கு மக்களவையில் அதிகாரப்பூர்வ எம்.பி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற எம்.பி. ஒருவர் இருப்பார்கள். அவர்கள் இருவரும் உங்கள் பிரச்சினைகளை எழுப்புவார்கள்" என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் வெற்றிபெற்றதால், அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.