மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 160 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

பாஜகவின் முதற்கட்ட பட்டியலில் 99 வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறங்குகிறார். அவர் அத்தொகுதியில் 2009-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார்.

13 பெண்கள்: முதற்கட்டப் பட்டியலில் 13பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர்பழங்குடி மற்றும் பட்டியலினத்தவர் ஆவர். 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. முதலமைச்சராக யார்பொறுப்பேற்பது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதையடுத்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் மற்றும் என்சிபி உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு கருத்து வேறுபாட்டல், உத்தவ் தாக்ரே அணியிலிருந்து விலகிய ஏக்நாத் ஷிண்டே பாஜக உதவியுடன் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், இவ்வாண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான என்சிபி கூட்டணி 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே வென்றது. உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார்தலைமையிலான என்சிபி கூட்டணி 30 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE