ஏஐ எச்சரிக்கையால் 60 யானைகள் ரயில் விபத்திலிருந்து தப்பின: கூட்டமாக தண்டவாளத்தை கடந்தபோது அலாரம்!

By KU BUREAU

கவுகாத்தி: அசாமில் யானைகள் கூட்டம் இரவில் தண்டவாளத்தை கடக்கும் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயக்கப்படும் பாதுகாப்பு அமைப்பு உதவியால் ரயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 60 யானைகள் உயிர் தப்பின.

அக்டோபர் 16 அன்று கவுகாத்தியில் இருந்து லும்டிங் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் ஹவாய்பூர் மற்றும் லாம்சகாங் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தின் இருந்த ஏஐ ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு (IDS) , அப்பகுதியில் யானைகள் கடப்பது பற்றி எச்சரித்தது.

அதனையடுத்து ரயில் ஓட்டுநர் ஜே.டி.தாஸ் மற்றும் கம்ரூப் எக்ஸ்பிரஸின் உதவியாளர் உமேஷ் குமார் ஆகியோர், அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை யானைகள் கடப்பதைப் பார்த்தனர். யானைகளை பார்த்ததும் அவர்கள் உடனடியாக அவசர பிரேக் போட்டு, 60 காட்டு யானைகள் மீதும் ரயில் மோதாமல் காப்பாற்றினர்.

கிழக்கு மத்திய ரயில்வே தனது வரம்பிற்குட்பட்ட மற்ற அனைத்து யானை வழித்தடங்களிலும் படிப்படியாக ஏஐ பாதுகாப்பு அமைப்பை நிறுவ திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களிலும் ரயில் தண்டவாளத்தில் நுழைந்த யானைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் இந்த ஏஐ அமைப்பு வெற்றிகரமாக உதவியது.

கிழக்கு மத்திய ரயில்வே 2023 ஆம் ஆண்டில் 414 யானைகளின் உயிரையும், ஜனவரி முதல் இந்த ஆண்டு அக்டோபர் 16 வரை 383 யானைகளையும் காப்பாற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE