ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்று நடந்த உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் போது, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின்படி, "ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தின் வரைவு தயாரிக்கப்பட்டு, அந்த தீர்மானத்தின் வரைவை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக, முதல்வர் உமர் அப்துல்லா ஓரிரு நாட்களில் டெல்லிக்கு செல்வார்" என்று தெரிவித்தன.
நேற்று முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி மற்றும் அமைச்சர்கள் சகீனா மசூத் இடூ, ஜாவேத் அகமது ராணா, ஜாவைத் அகமது தார் மற்றும் சதீஷ் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
» 'அமரன்’ டூ ‘லக்கி பாஸ்கர்’: தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
» ‘GOAT' படம் விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்தின் காப்பியா? இயக்குநர் வெங்கட்பிரபு சொன்ன விளக்கம்
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்காத வரை காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் சேராது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசி என்சி தலைவர் பரூக் அப்துல்லா, "நாங்கள் முன்பு மாநில அந்தஸ்து பற்றி பேசினோம். இன்றும் கூட, மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரிய மனுவை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.