மும்பை: 4-வது நாளாக நேற்று விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்களின் 2 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து 147 பயணிகளுடன் விஸ்தாரா விமானம் நேற்று மும்பை வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து தனியே கொண்டு செல்லப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமானத்தில் முழு அளவில் சோதனை நடத்தப்பட்டது.
இதுபோல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேற்று மும்பை வந்த இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த விமானமும் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தனியே கொண்டு செல்லப்பட்டது. பிறகு பயணிகள் இறக்கிவிடப்பட்டு, விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுபோல் மற்றவர்களும் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ அக்.18, 2024
» இந்திய குடியுரிமை சட்டப்பிரிவு 6ஏ செல்லும்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
மிரட்டல் விடுப்போருக்கு தடை: விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தண்டிக்க ஏதுவாக சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை வெளிநாடுகள் எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. விமானப் பயணிகளை பாதுகாக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், விமானத்துக்குள் தகராறில் ஈடுபடும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஆனால், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது குறித்து விமான விதிமுறைகளில் தெளிவான வரையறை இல்லை. இதுபோன்ற மிரட்டல்களுக்கு காவல் துறையில் புகார்அளிக்கப்பட்டு குற்றவியல் சட்டத்தின் மூலமாகவே இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றியமைக்க மத்திய உள்துறை, சட்ட அமைச்கத்திடம் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார்.