அகர்தலா-மும்பை எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டன: அசாமில் அடுத்த அதிர்ச்சி

By KU BUREAU

அசாம்: திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் 7 பெட்டிகள் இன்று பிற்பகல் 3:55 மணியளவில் அசாமில் உள்ள திபோலாங் ரயில் நிலையத்தில் தடம் புரண்டன.

அகர்தலா-லோகமான்ய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் (12520) இன்று காலை அகர்தலாவில் இருந்து புறப்பட்டது. அசாம் மாநிலத்தில் உள்ள லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதிக்கு அருகே பிற்பகல் 3:55 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. தடம் புரண்ட பெட்டிகளில் ரயிலின் பவர் கார் ஒன்றும் உள்ளது என தெரியவந்துள்ளது.

மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ரயில்வே மூத்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விபத்து நிவாரண ரயில் மற்றும் விபத்து நிவாரண மருத்துவ ரயில் ஆகியவை லும்டிங்கில் இருந்து புறப்பட்டு சென்றன. மேலும், லும்டிங்-பதர்பூர் இடையே ரயில் சேவையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று 15:55 மணிக்கு லும்டிங் அருகே உள்ள திபாலாங் நிலையத்தில் தடம் புரண்டன. உயிரிழப்பு மற்றும் படுகாயம் யாருக்கும் ஏற்படவில்லை, அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

நாங்கள் ரயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். நிவாரண ரயில் விரைவில் அந்த இடத்தை அடையும். லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126 தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE