மும்பை: மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், அக்கூட்டணியில் தங்களுக்கு 12 இடங்கள் வழங்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர தலைவர் அபு ஆஸ்மி, "தற்போது காங்கிரஸ், என்சிபி(எஸ்சிபி) மற்றும் சிவசேனா (யுபிடி) ஆகிய கட்சிகள் மட்டுமே மகா விகாஸ் அகாதியில் கூட்டணி ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றன. மற்ற சிறிய கட்சிகளுடனான சந்திப்புகள் இன்னும் நடைபெறவில்லை. இது மிகவும் தாமதம் என்பதை எனது ட்வீட் மூலம் அவர்களுக்கு நினைவூட்டினேன். இதில் எந்த வெறுப்பும் இல்லை, ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இடையேயான உறவும் நன்றாக உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கூட்டணியில் இருந்து நாங்கள் 12 இடங்களைக் கேட்கிறோம். அந்த அளவுக்கு இடங்களைப் பெற முயற்சிப்போம். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என எந்த கட்சியாக இருந்தாலும், சமாஜ்வாதி கட்சியுடன் பேசாமல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால், அவர்கள் அதன்பின்னர் சமாஜ்வாதி கட்சியை மகாவிகாஸ் அகாதியின் ஒரு அங்கமாக கருத வேண்டாம்.
இந்தச் சூழ்நிலையில், அவர்களின் முடிவு எதுவாக இருப்பினும், சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ள சட்டசபை இடங்களில் போட்டியிட விரும்புகிறது என்று எங்கள் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவிடம் அனுமதி பெற விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
» போக்சோ வழக்கில் ஜாமீன் ரத்து - பரமக்குடி அதிமுக கவுன்சிலருக்கு அக்.25 வரை நீதிமன்ற காவல்
» மாற்று சுற்றுச்சாலை திட்டம்: மதுரை விமான நிலையத்துக்கான பயண தூரம் 5 கி.மீ. அதிகரிக்க வாய்ப்பு
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், “நான் நாளை மகாராஷ்டிரா செல்கிறேன்.இந்தியா கூட்டணியுடன் போட்டியிடுவதே எங்கள் முயற்சி. நாங்கள் சீட் கேட்டுள்ளோம். எங்களிடம் ஏற்கெனவே 2 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். எனவே எங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
இதனையடுத்து மகாராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைருமான விஜய் வடேட்டிவார், "சமாஜ்வாடி கட்சிக்கு மகா விகாஸ் அகாதியின் எந்த கதவும் மூடப்படவில்லை. எங்களின் முதல் கலந்துரையாடல் நடந்துள்ளது. இன்று சீட் பகிர்வு நடத்துவோம். அவர்களுடன் விவாதித்த பிறகு இரண்டு நாட்களில் தீர்வு காண்போம். இன்றைய கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சிக்கு சீட் கொடுப்பது குறித்து ஆலோசிப்போம். உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது போல், மகாராஷ்டிராவிலும் நடக்கும்" என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.