நாடு முழுவதும் 3 லட்சம் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரதம்: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு

By KU BUREAU

சென்னை: மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 3 லட்சம் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இளம் மருத்துவர்களான முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அம்மருத்துவமனை முதுநிலை மருத்துவர்கள் ராஜினாமா செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது.

இந்நிலையில், நீதிகேட்டு போராடும் இளம் மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நாடுமுழுவதும் 700-க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளில் 3 லட்சம் இளம் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவமாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் 30 ஆயிரம் பேர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கனமழை பெய்து வருவதால், தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழக கிளை) தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கத்தின் தமிழக தலைவரும் அகில இந்திய இளம் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான மருத்துவர் கே.எம்.அபுல்ஹாசன் தலைமையில் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக கே.எம்.அபுல்ஹாசன் கூறும்போது, “நாடுமுழுவதும் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளஇளம் மருத்துவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE