ஜார்க்கண்டில் நவ. 13, 20-ல் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு: நவம்பர் 20-ல் மகாராஷ்டிர பேரவை தேர்தல்

By KU BUREAU

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடத்தப்படும். மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 1,00,186வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். ஜார்க்கண்ட்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 29,562வாக்குச்சாவடிகள் அமைக்கப் படும். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்சட்டப்பேரவைத் தேர்தல்நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும். இரு மாநிலங்களின் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல்: நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 50 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதன்படி உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேடு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் நவம்பர் 13-ம் தேதி 47 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவின் நாந்தேடு மக்களவைத் தொகுதி மற்றும் உத்தராகண்டின் கேதார்நாத் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். வரும் நவம்பர் 23-ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE