ஹரியானா போல அதீத நம்பிக்கை கூடாது: மகாராஷ்டிரா கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை எச்சரிக்கை!

By KU BUREAU

புதுடெல்லி: ஹரியானா தேர்தல் தோல்விக்குப் பிறகு அதீத நம்பிக்கையுடன் இருக்க கூடாது என மகாராஷ்டிர தலைவர்களை காங்கிரஸ் தலைமை எச்சரித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இன்று முக்கிய சந்திப்பிற்காக கூடினர்.

வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்கவிருக்கும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக மகாராஷ்டிரத் தலைவர்களுடன் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை நடத்தியது.

இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கட்சியினருக்கு தெளிவான எச்சரிக்கைகளை விடுத்தனர். அதில், ஹரியானா முடிவுகளை நேரடியாகக் குறிப்பிடாமல், அதீத நம்பிக்கையைத் தவிர்க்கவும், ஒற்றுமையாக இருக்கவும், ஆளும் கூட்டணியைத் தோற்கடிக்க கடுமையாக உழைக்கவும் மகாராஷ்டிரத் தலைவர்களை காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளது.

கூட்டத்தில் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு மகாராஷ்டிராவில் ஜாதி மற்றும் சமூக இயக்கவியல் குறித்து கட்சியினருக்கு விளக்கினார். மேலும், இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் மும்பையில் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

பாஜக எவ்வாறு வாக்காளர்களை சாதி மற்றும் சமூக அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்றும், மகா விகாஸ் அகாதிக்கு எதிரான கிளர்ச்சி வேட்பாளர்களை ஆதரிப்பதன் மூலம் ஆட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க முயற்சிக்கிறது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் விவாதித்தனர்.

288 சட்டமன்ற இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) , சிவசேனா( உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE