ஜார்க்கண்ட் அமைச்சரின் தனிச்செயலாளர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: ஹேமந்த் சோரனுக்கு அடுத்த செக்!

By KU BUREAU

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூரின் தனிச் செயலாளர் ஹரேந்திர சிங், ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சன் மற்றும் தொழிலதிபர் விஜய் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று 20 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

ஜார்க்கண்டில் ஜல் ஜீவன் மிஷனில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை, ராஞ்சி மற்றும் சாய்பாசாவில் உள்ள பல்வேறு இடங்களிலும், ரட்டு சாலையில் உள்ள விஜய் அகர்வாலின் வீடு, ஹர்மு மற்றும் மொர்ஹபாடியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் ரஞ்சன் மற்றும் அமைச்சரின் தனிச் செயலாளர் ஹரேந்திர சிங் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஜார்கண்டில் பல மாவட்டங்களில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவதில் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஹேமந்த் சோரன் அரசாங்கத்தின் முக்கியப் அமைச்சரான மிதிலேஷ் தாக்கூர், கர்வா சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளதால், அடுத்ததாக மிதிலேஷும் விசாரணை வளைத்தில் வருவார் என சொல்லப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அமைச்சர் மிதிலேஷ் மீதான பிடியை அமலாக்கத்துறை இறுக்குவதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

சமீபத்தில், ஜார்க்கண்ட் ஹசாரிபாக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜல் ஜீவன் மிஷனில் நடந்த முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE