ரத்தன் டாடாவுக்கு பிரியாவிடை முதல் முரசொலி செல்வம் மறைவு வரை |  டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு: தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல்: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மும்பையில் கூடிய மகாராஷ்டிர அமைச்சரவை, தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் இரங்கல்: ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரத்தன் டாடா தொலைநோக்குப் பார்வை கொண்ட வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா, அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றுக்கு நிலையான தலைமையை அவர் வழங்கினார்” என்று தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் உதவியாளர் உருக்கம்: ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது இளம் நண்பரும், உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு கவித்துமான இரங்கல் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். சாந்தனுவின் பதிவு இணையவெளியில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “டாடாவுடனான நட்பின் பிரிவு விட்டுச் சென்று வெற்று இடத்தை வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சித்துக் கொண்டிருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வம் காலமானார்: ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 84. மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழை கவனித்து வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். வியாழக்கிழமை காலை ‘முரசொலி’ செல்வம் காலமானார்.

முதல்வர் ஸ்டாலின் உருக்கம்: “நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

முரசொலி செல்வம் மறைவு - அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்: “அரசியலில் கருணாநிதிக்கு துணையாக இருந்தவர். அதன் காரணமாகவே பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். மிகவும் அமைதியான இயல்பு கொண்ட அவர், திமுக நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஆவார். முரசொலி செல்வத்தின் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்” தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அக்.14 வரை கனமழை வாய்ப்பு: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக, அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அக்டோபர் 14 வரை பல்வேறு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு: 2024-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று அதிர்ச்சியை எதிர்கொள்ளும், மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் தீவிரக் கவிதைக்கான உரைநடை என்ற அவரது நூலுக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு மிக்க பரிசு தெற்காசிய இலக்கியத்தின் மீது ஒரு வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.

“உங்களுடன் கடைசி வரை நிற்பேன்” - சீமான் தந்த உறுதி: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் வழிமடக்கி போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பொடவூரில் திரண்ட தொழிலாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். “கடைசி வரை உறுதியாக நின்று தொழிலாளர்கள் போராட வேண்டும். உங்களின் வெற்றி அனைத்து தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உரிமை பலி கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டத்துக்கு உறுதியாக நானும், நாம் தமிழர் கட்சியும் கடைசி வரை நிற்போம்" என்று சீமான் கூறினார்

பிரதமர் மோடி பயணம்: 21-வது ஆசியான் – இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, லாவோஸ் புறப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE