ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம்

By KU BUREAU

மும்பை: காலமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று தீர்மானம் நிறைவேற்றியது.

உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இவரது மறைவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்தனர். ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர அமைச்சரவை, " ரத்தன் டாடா ஒரு சிறந்த சமூக சேவகர், தொலைநோக்கு மற்றும் தேசபக்தி கொண்ட தலைவரை நாடு இழந்துவிட்டது. இந்தியாவின் தொழில்துறையில் மட்டுமல்ல, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அளப்பரியது. அவர் மகாராஷ்டிராவின் மகன். இந்தியா அவரைப் பெருமைப்படுத்தியது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் ரத்தன் டாடாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது,

மும்பை நரிமன் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்தில் இன்று காலை 10.30 மணி முதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 3.30 மணியளவில் அளவில் அவரது உடல் வோர்லி மயானத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. பார்சி முறைப்படி நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமித் ஷா கலந்து கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE