அடுத்த ஆபத்து; ராஜஸ்தான் பெண் காங்கோ காய்ச்சலால் மரணம் - சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை

By KU BUREAU

ராஜஸ்தான்: ஜோத்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் காங்கோ காய்ச்சலால் அகமதாபாத் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து ராஜஸ்தான் சுகாதாரத் துறை, மாநிலம் முழுவதும் காங்கோ நோயைத் தடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண், காய்ச்சல் காரணமாக அகமதாபாத்தில் உள்ள என்ஹெச்எல் முனிசிபல் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு காங்கோ காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ராஜஸ்தான் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ரவி பிரகாஷ் மாத்தூர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைவான மீட்புக் குழுவை அனுப்பி காங்கோ தொற்றுநோயைத் தடுக்க ஜோத்பூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மற்றும் அறிகுறி உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காங்கோ காய்ச்சல் விலங்கு மூலமாக மனிதனுக்கு பரவும் வைரஸ் நோயாகும். மனிதர்களை உண்ணி கடித்தால் இந்நோய் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கால்நடை பராமரிப்புத் துறையினர் இந்நோய் வராமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் இந்நோய் வராமல் தடுக்கவும், பாதுகாக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

யாரேனும் ஒருவருக்கு காங்கோ காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவரிடமிருந்து மாதிரியை உடனடியாக எடுத்து பரிசோதனைக்கு அனுப்புமாறு அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE