உலகில் வன உயிரினங்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகளில் 73% குறைந்துள்ளது: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

By KU BUREAU

புதுடெல்லி: உலக வன உயிரினங்களின் மக்கள்தொகை 50 ஆண்டுகளில் 73% சரிந்துள்ளது. லிவிங் பிளானட் அறிக்கை 2024 அறிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 69% ஆக இருந்த இந்த சரிவு தற்போது 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 85% உயிரினங்களின் சரிவு பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து நிலப்பகுதிகளில் 69% மற்றும் கடல் 56% என இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) இன் இரு வருட அறிக்கை கூறியது. உணவின்மையால் ஏற்படும் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு உயிரினங்கள் அழிவுக்கு முக்கிய காரணம் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதிகப்படியான இயற்கை சுரண்டல், ஆக்கிரமிப்பு மற்றும் நோய்கள், காலநிலை நெருக்கடி காரணமாக வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்கான இன்டர்நேஷனல் டைரக்டர் ஜெனரல் கிர்ஸ்டென் ச்சுஜிட் வெளியிட்ட அறிக்கையில், "இயற்கை ஒரு துயர அழைப்பை வெளியிடுகிறது. இயற்கை இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் இணைக்கப்பட்ட நெருக்கடிகள் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அவற்றின் வரம்புகளுக்கு அப்பால் தள்ளுகின்றன. ஆபத்தான உலகளாவிய முனைப்புள்ளிகள் பூமியின் வாழ்க்கை ஆதரவு அமைப்புகளை சேதப்படுத்தும் மற்றும் சமூகங்களை சீர்குலைக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன." என தெரிவித்தார்.

இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் பகுதியில், சுற்றுச்சூழல் மாசுபாடு வனவிலங்குகளின் எண்ணிக்கைக்கு கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது, இப்பகுதியில் சராசரியாக 60% வனவிலங்குகள் சரிவு பதிவாகியுள்ளது.

தென் அமெரிக்கா, கரீபியன், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் செங்குத்தான சரிவு காணப்பட்டது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும், 1970 இல் குறியீட்டு எண் தொடங்குவதற்கு முன்பே இயற்கையின் மீது பெரிய அளவிலான தாக்கங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE